search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ்கோடி கடற்கரை"

    • தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ராமேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • முதலில் படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக தெரிவித்த அவர், பின்னர் விமானம் மூலம் வந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ராமேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவரது பெயர் தினேஷ் காந்தன் (வயது 36) என்பதும், இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் இலங்கையில் சில ஆண்டுகள் போலீஸ்காரராக வேலை பார்த்து உள்ளார். அதன் பின்னர் வேலையை விட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் தினேஷ் காந்தன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண், அவரைவிட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேசுவரம் வர முயற்சி செய்துள்ளார்.அப்போது அவரை இலங்கை கடற்படையினர் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

    அதன்பின்னர் அவர் விசாவுக்கு விண்ணப்பித்து விமானம் மூலம் கடந்த 8-ந் தேதி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ராமேசுவரம் வந்து தனுஷ்கோடிக்கு சென்று அங்கு சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

    முதலில் படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக தெரிவித்த அவர், பின்னர் விமானம் மூலம் வந்த தகவலை தெரிவித்துள்ளார்.எதற்காக இப்படி மாற்றி கூறினார் என்று கேட்டபோது, அகதிகள் முகாமில் தங்குவதற்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தினேஷ் காந்தனிடம் கியூ பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அவர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வந்தாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழகம் வந்து அகதிகள் முகாமில் தங்கி வேலை செய்யலாம் என்று வந்ததாக தெரிவித்தார். அவர் சொன்னதை உறுதி செய்த போலீசார், அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

    அவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பி செல்ல இன்னும் 11 நாட்கள் அனுமதி இருப்பது தெரியவந்ததால் அவரை எச்சரித்து சென்னை சென்று விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


    ×